ஷா ஆலாம், பிப் 14 – திடக்கழிவு மற்றும் பொதுத் தூய்மை மேலாண்மைச் சட்டம் 2007 (சட்டம் 672)-இன் கீழ், கடந்த ஜனவரி மாதம் முதல் குப்பைகளை கண்ட இடங்களில் வீசிய குற்றத்திற்காக மொத்தம் 754 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சர், ஙா கோர் மிங் கூறுகையில், அந்த எண்ணிக்கையில் 137 வெளிநாட்டினர் உட்பட 478 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்றார்.
"நேற்று, முதல் முறையாக, 15 நபர்களுக்கு ஆறு மணி நேரம் சமூக சேவை செய்யும் தண்டனை விதிக்கப்பட்டது. சாலைகளைச் சுத்தம் செய்தல், கால்வாய்கள் மற்றும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதோடு, அவர்களுக்கு ரிம1,500 அபராதமும் விதிக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
இன்று, யூக் சோய் தேசிய வகை சீன இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான் மாதத்தை முன்னிட்டு தம்புன் நாடாளுமன்றத்திற்கான ‘காசிஹ் மடாணி’ நன்கொடை வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதே நிகழ்வில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தம்புன் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 3,000 மாணவர்களுக்கு தலா ரிம300 நன்கொடையாக வழங்கினார்.
நோய்களைத் தவிர்ப்பதற்கும், சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்வதற்கும் பொதுமக்கள் தூய்மையைப் பேண வேண்டும் என்று ஙா மேலும் வலியுறுத்தினார்.
"மாணவர்களே, தூய்மையைப் பேணுங்கள். ஏனெனில் சமூக சேவைக்கான உத்தரவு இப்போது செயல்படுத்தப் பட்டுள்ளது. மலேசியா தூய்மையாகவும், மக்கள் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும்," என்றார் அவர்.
மற்றொரு நிலவரத்தில், சீனப் புத்தாண்டு மற்றும் ரமலானை முன்னிட்டு தம்புன் நாடாளுமன்றத்தில் உள்ள 16 பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவர்களுக்கு ரிம 1 மில்லியன் மதிப்பிலான ‘காசிஹ் மடாணி’ சிறப்பு நன்கொடை வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெர்ஜெயா கேர்ஸ் அறக்கட்டளையின் இந்த நன்கொடை, குறிப்பாக B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் சுமையைக் குறைக்க உதவும் என நம்பப்படுகிறது.







