அசாம் பாக்கி மீதான பங்கு விவகாரப் புகார்: விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு

13 பிப்ரவரி 2026, 9:11 AM
அசாம் பாக்கி மீதான பங்கு விவகாரப் புகார்: விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு

ஷா ஆலாம், பிப். 13: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி மீது சுமத்தப்பட்டுள்ள பங்குகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரும் தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் இந்த சிறப்புக் குழுவிற்குத் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆணையர் சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை மேல் நடவடிக்கைக்காக அமைச்சரவையில் சமர்ப்பிப்பதே இக்குழுவின் முதன்மைப் பணியாகும்.

விசாரணை செயல்முறையில் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபஹ்மி விளக்கினார்.

நிதிச் சேவை நிறுவனம் ஒன்றில் அசாம் பாக்கி மில்லியன் கணக்கான பங்குகளை வைத்திருப்பதாகப் புளூம்பெர்க் (Bloomberg) செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்தது.

பெருநிறுவன ஆவணங்களின் அடிப்படையில், அவர் சுமார் 800,000 ரிங்கிட் மதிப்பிலான பங்குகளை வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது அரசு ஊழியர்களுக்கு அனுமதிக்கப்பட்ட பங்கு வரம்பை விட அதிகம் என்பதால், பொதுவெளியில் பெரும் விவாதங்களைக் கிளப்பியது.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை அசாம் பாக்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தமக்குச் சொந்தமான பங்குகள் அனைத்தும் வெளிப்படையான முறையில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே வாங்கப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.

கடந்த ஆண்டு வாங்கப்பட்ட அந்தப் பங்குகள் முறையான அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டன என்றும், அதே ஆண்டிலேயே அவை விற்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தாம் எதையும் மறைக்கவில்லை என்றும் அவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

தமது நேர்மையை நிரூபிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு விசாரணைக்கும் தாம் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக அசாம் பாக்கி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த விஷயம் குறித்து அரசாங்கம் விசாரிக்கத் தயாராக இருந்தால், அதனை நான் வரவேற்கிறேன்" என்றார்.

மேலும், தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறி புளூம்பெர்க் நிறுவனத்திற்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.