வழிபாட்டுத் தலம் விவகாரம்: சட்டத்தை மீறி எவரும் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது - பிரதமர் அன்வார் எச்சரிக்கை

12 பிப்ரவரி 2026, 8:45 AM
வழிபாட்டுத் தலம் விவகாரம்: சட்டத்தை மீறி எவரும் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது - பிரதமர் அன்வார் எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப் 12: மலேசியாவில் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சனைகளில் எந்தவொரு தரப்பினரும் சட்ட வரம்புகளை மீறித் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க உரிமையில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாடு சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது என்பதை வலியுறுத்திய அவர், அனைத்துத் தரப்பினரும் இந்தக் கொள்கையை மதித்து நடக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதும், மத நம்பிக்கைகளின் புனிதத்தைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் முதன்மைக் கடமையாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பல சிக்கல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் எழும் சூழலிலும், பொதுவான ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டே தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மலேசிய சீன வர்த்தக மற்றும் தொழிலியல் சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ACCCIM) ஏற்பாட்டில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான சீனப் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவது மற்றும் உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் சட்ட விதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.சமீபகாலமாக சிலாங்கூர் மற்றும் பிற மாநிலங்களில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பன்றிப் பண்ணை திட்டங்கள் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சிக்கலான விவகாரங்கள் பரஸ்பர மரியாதையுடனும், முறையான சட்ட வழிமுறைகளுடனும் கையாளப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.நாட்டின் அதிகாரப்பூர்வ மதமான இஸ்லாத்தையோ அல்லது பெரும்பான்மை முஸ்லிம்களையோ அவமதிக்கும் செயல்களில் எவரும் ஈடுபடக்கூடாது என்று அன்வார் எச்சரித்தார்.

அதே வேளையில், மற்ற சமூகங்களின் கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் போக்கும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.