கிள்ளான் துறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு: மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் விவாதிக்க மந்திரி புசார் தயார்

12 பிப்ரவரி 2026, 8:35 AM
கிள்ளான் துறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு: மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் விவாதிக்க மந்திரி புசார் தயார்

ஷா ஆலாம், பிப் 12- சுங்கை குராவ் பூர்வகுடி மக்கள் குழு முன்வைத்துள்ள கிள்ளான் துறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு விவகாரம், விரைவில் நடைபெறவுள்ள மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் (MMKN) விவாதிக்கப்படும்.மாநில அரசின் மேலதிக ஆய்விற்காக இவ்விவகாரம் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என மாண்புமிகு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

"இவ்விவகாரத்தை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் முன்வைப்பேன்," என்று இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ரமலான் சந்தை அனுமதி வழங்கும் நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.

முன்னதாக, அப்பகுதியில் உள்ள மீனவர்களின் வருமான ஆதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் எனக் கூறப்படும் இந்த துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக கோல லங்காட், சுங்கை குராவ் பூர்வகுடி மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

கிள்ளான் துறைமுகத்தை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியான முனையம் மூன்று (Terminal Tiga) திட்டத்தின் முக்கிய தளமாக, கடலோர மற்றும் கடல் சார்ந்த சுமார் 1,700 ஹெக்டேர் நிலத்தை சிலாங்கூர் அரசு முன்னதாக அடையாளம் கண்டிருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பூர்வகுடி மக்கள், உள்ளூர்வாசிகள், கடலோர மீனவர்களின் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் அதே வேளையில், இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கிள்ளான் துறைமுகத்தின் கொள்ளளவை கணிசமாக அதிகரிக்கும் இத்திட்டம், பல ஆண்டுகளாக தாமதமாகி வருவதாகவும், "இனி தாமதப்படுத்தக் கூடாது" என்றும் அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் பொருளாதாரப் போட்டித்தன்மையை வலுப்படுத்தவும், உள்ளூர் சமூகத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் கூடிய ஒரு மூலோபாய முதலீடாக இத்திட்டத்தை முன்னெடுக்க மத்திய, மாநிலத் தலைவர்கள் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.