2026 சிலாங்கூர் சுக்மா போட்டி; 72 மணிநேரத்திற்குள் 18 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

11 பிப்ரவரி 2026, 9:18 AM
2026 சிலாங்கூர் சுக்மா போட்டி; 72 மணிநேரத்திற்குள் 18 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

ஷா ஆலாம், பிப் 11- 2026ஆம் ஆண்டுக்கான மலேசிய விளையாட்டுப் போட்டிகளின் (சுக்மா) தன்னார்வலராகப் பதிவு செய்ய கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் 18,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எதிர்பாராத வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த எண்ணிக்கை, நிர்ணயிக்கப்பட்ட 5,000 தன்னார்வலர்கள் என்ற ஆரம்ப இலக்கைத் தாண்டியுள்ளது என்று விளையாட்டுப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.

இது இந்த மதிப்புமிக்க விளையாட்டுப் போட்டிக்கு மக்கள் அளிக்கும் வலுவான ஆதரவைப் பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து விண்ணப்பங்களும் தகுதிச் சுற்றுக்கு உட்படுத்தப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சிலாங்கூர் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

"கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு திறக்கப்பட்டதிலிருந்து நேற்று மதியம் வரை, நாங்கள் 18,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம், இது எங்களின் 5,000 தன்னார்வலர்கள் என்ற இலக்கைத் தாண்டியுள்ளது."

"ஒவ்வொரு இடத்திற்கும் மற்றும் விளையாட்டிற்கும் உள்ள தேவைகளைக் கருத்தில் கொண்டு தன்னார்வலர்களின் எண்ணிக்கையை நாங்கள் சமநிலைப்படுத்துவோம்," என்று அவர் கூறினார்.

"பாரா சுக்மா போட்டிகளிலும் இவர்கள் ஈடுபடவிருப்பதால், தேவைக்கேற்ப தன்னார்வலர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும்," என்று அவர் ‘சிலாங்கூர் ரோட் டு சாம்பியன் பாரா சுக்மா 2026' நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தபோது கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஷா ஆலாம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுக்மா மற்றும் பாரா சுக்மா 2026 தன்னார்வலர்கள் தொடக்க விழாவை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

22ஆவது சுக்மா போட்டிகள் 2026 ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறவுள்ளது. இதன் தொடக்க விழா சிப்பாங் அனைத்துலக ஓடுதளத்தில் (SIC) நடைபெறும். பாரா சுக்மா போட்டிகள் 2026 செப்டம்பர் 5 முதல் 10 வரை நடைபெறும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.