ஷா ஆலம், செப் 13: சிலாங்கூர் 2026 மலேசியா விளையாட்டுப் போட்டிக்கு செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் தற்போது 60 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதில் விளையாட்டு வளாகங்கள் மற்றும் போட்டிகள் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாடுகளும் அடங்கும்.
முழுமையான முன்னேற்பாடுகள் வரும் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக விளையாட்டு துறையின் மேம்பாட்டு செயற்குழு உறுப்பினர் தெரிவித்தார். மேலும் இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள சுக்மா போட்டிக்கு முன் சீராய்வு செய்ய போதுமான கால அவகாசம் இருக்கும் என்றார் அவர்.
மேலும் அனைத்து விளையாட்டு உபகரணங்களும் சோதிக்கப்பட்டு, போட்டிக்குத் தயாராக இருக்க வேண்டும், என்று நஜ்வான் ஹலிமி , நேற்று நடைபெற்ற 15வது சிலாங்கூர் விளையாட்டு விழா அறிவிப்பு ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.
சுக்மா வெற்றிகரமாக நடைபெறுவதற்காக, பொதுமக்கள் பங்குபெறும் வகையில் தன்னார்வலர்களுக்கான பதிவு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும். எனினும் முன்னுரிமை பள்ளி முடித்த மாணவர்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படும்.
சிலாங்கூர் விளையாட்டு கவுன்சிலின் கீழ் செயல்படும் சிலாங்கூர் சுகரெலாவான் மற்றும் டீம் சிலாங்கூர் ஆகியனவும் செயல்படத் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
தன்னார்வலர்களுக்கான பயிற்சி புத்தகம் தயாரிக்கப்படும். அவர்கள் அடிப்படை நெறிமுறைகள், விருந்தினர்களுடன் பழகும் திறன் போன்றவற்றில் தேர்ச்சி பெறுவார்கள். ஏனெனில் அவர்கள் மாநிலத்தின் முகவராக செயல்படுகிறார்கள்.
அத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு பாடலும் தயாரிப்பில் இருப்பதாக கூறினார். இந்த சுக்மா போட்டி உற்சாகத்தை உயர்த்தவும், நிறைவான சூழலை உருவாக்கவும் உதவும்.
சிலாங்கூர் 2026 மலேசியா விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறும். சுக்மா பாரா 2026 செப்டம்பர் 5 முதல் 14,வரை நடைபெற உள்ளது.
சிலாங்கூரின் சின்னமாக வெள்ளை கழுகு தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், 22வது பதிப்பை குறிக்கும் வகையில் ஜோதி வடிவிலான XXII ரோமானிய எண் அதிகாரப்பூர்வ சுக்மா சிலாங்கூர் 2026 சின்னமாக வெளியிடப்பட்டுள்ளது.