வழிப்பாட்டு தலங்களைக் கட்டுவதற்கான சட்டத்திட்டங்களுக்கு அனைத்து தரப்பினரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்- மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுரை

11 பிப்ரவரி 2026, 9:17 AM
வழிப்பாட்டு தலங்களைக் கட்டுவதற்கான சட்டத்திட்டங்களுக்கு அனைத்து தரப்பினரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்- மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுரை

கோலாலம்பூர், பிப் 11- நிலப் பயன்பாடு மற்றும் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது தொடர்பான சட்டதிட்டங்களுக்கு அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் சீனக் கோயில்கள் கட்டுவதைப் போலவே, கோயில் கட்டுமானம் தொடர்பான சிக்கல்களும் அதே விதிமுறைகள் மற்றும் சட்டப்பூர்வ வழிகளின்படி கையாளப்பட வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் பேஸ்புக் பதிவில் இன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி 2018-இல், ஜொகூரில் ஒரு கோயில் இடிப்புப் பிரச்சினையைச் சட்டத்தின் அடிப்படையில் நல்லிணக்கத்துடனும் விவேகத்துடனும் தீர்ப்பதில் தாம் ஒரு சமரசராகச் செயல்பட்ட அனுபவத்தை மாமன்னர் நினைவு கூர்ந்தார்.

"தேவையற்ற நிகழ்வுகளைத் தவிர்ப்பதற்கும், பொது அமைதியைப் பேணுவதற்கும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, அந்தப் பிரச்சினையை நானே சுமுகமாகத் தீர்த்து வைத்தேன்."

"இஸ்லாம் மனிதர்களிடையே பரஸ்பர மரியாதை கொள்கையை வலியுறுத்துகிறது. மற்ற மதத்தினர் தங்கள் நம்பிக்கைகளையும் வழிபாடுகளையும் பின்பற்றுவதை இஸ்லாம் தடுக்கவில்லை."

"மற்ற மதத்தினரும் இஸ்லாத்தை மதிக்கும் மனப்பான்மையைக் காட்ட வேண்டும். இந்த பரஸ்பர மரியாதையான அணுகுமுறை, பல மதம் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, தவறான புரிதல்கள், பதட்டங்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களைத் தவிர்க்கவும் மிகவும் முக்கியமானது," என்று மாமன்னர் கூறினார்.

எனவே, கோயில் அல்லது பிற வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் எழும்போது, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் நல்லெண்ணத்தைப் பேண, அனைத்துத் தரப்பினரும் நாட்டின் சட்டங்களைப் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும் என்றும், கருத்து வேறுபாடுகளைச் சட்டப்பூர்வமான வழிகளில் தீர்க்க வேண்டும் என்றும் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.

பல்லின மக்களைக் கொண்ட நாட்டின் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கக்கூடிய மதம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் எந்தத் தரப்பினரும் அரசியல் ஆக்கக்கூடாது என்றும் மாமன்னர் கடுமையாக எச்சரித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.