புத்ராஜெயா, பிப் 12: சிலாங்கூர், ரவாங்கில் உள்ள ஆலயம் ஒன்று, ஒரு கும்பலால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன ரீதியிலான பதற்றத்தைத் தூண்டும் எத்தகைய செயல்களையும் காவல்துறை அனுமதிக்காது என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியான் இஸ்மாயில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவது காவல்துறையின் கடமையாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.இன்று நடைபெற்ற உள்துறை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகக் கூறினார்.
ஒரு வழிபாட்டுத் தலத்தின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து ஏதேனும் கேள்விகள் எழுந்தால், அது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே அணுகப்பட வேண்டுமே தவிர, வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
"இனம் மற்றும் மதம் சார்ந்த விவகாரங்கள் மிகவும் உணர்ச்சிகரமானவை. இத்தகைய சூழலில் தவறான அல்லது அரைகுறையான தகவல்கள் பரவுவது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
நிலப்பயன்பாடு அல்லது நகரத் திட்டமிடல் தொடர்பான சிக்கல்களைச் சட்ட ரீதியான செயல்முறைகளின் மூலமே தீர்க்க வேண்டும் என்றும், எவரும் சட்டத்தைத் தன் கையில் எடுக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய அவர், உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்பூர்வமான தீர்வைக் காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ரவாங்கில் நடந்த இந்த அத்துமீறல் மற்றும் ஆலயம் இடிக்கப்பட்ட சம்பவத்தை "ஆபத்தான தூண்டுதல் நடவடிக்கை" என்று அவர் வர்ணித்தார்.
இதற்கிடையில், உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி ரவாங்கில் உள்ள அந்த ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அதனை இடித்த சம்பவம் தொடர்பாக நான்கு நபர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகளை உணர்ச்சிகரமான போராட்டங்களாக மாற்றாமல், அரசாங்க அமைப்புகளின் வழிகாட்டுதலோடு சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என்பதே உள்துறை அமைச்சின் நிலைப்பாடாக உள்ளது என்று டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் குறிப்பிட்டார்.


