உலக எந்திரவியல் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கு 80க்கும் மேற்பட்ட பதக்கங்கள்

11 பிப்ரவரி 2026, 9:09 AM
உலக எந்திரவியல் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கு 80க்கும் மேற்பட்ட பதக்கங்கள்

கோலாலம்பூர், பிப் 11 - அனைத்துலக அளவில் நடைபெற்ற உலக எந்திரவியல் விளையாட்டுப் போட்டியில் (World Robot Games 2025) பங்கேற்று, 80-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த 24 மலேசிய மாணவர்களை மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பாராட்டினார்.

நாட்டில் உள்ள 13 பள்ளிகளைப் பிரதிநிதித்துச் சென்ற மாணவர்கள், எந்திரவியல் மற்றும் 'ஸ்டெம்' (STEM) - (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறையில் தங்களின் அபார திறமையை வெளிப்படுத்தி உலக அரங்கில் மலேசியாவின் பெயரை ஓங்கச் செய்துள்ளனர்.

இப்போட்டியில் தைவான், ஜப்பான், தென்கொரியா, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பங்கேற்ற மலேசிய மாணவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு பதக்கத்தை வென்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட மிகச் சிறந்த முன்னேற்றம் என்றும் அமைச்சர் ரமணன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மாணவர்களின் இந்த வெற்றி மலேசியாவின் 'ஸ்டெம்' கல்வி முறையின் வலிமையைக் காட்டுவதாகவும், முறையான பயிற்சி மற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட்டால் நமது மாணவர்கள் உலகத் தரத்திற்குப் போட்டியிட முடியும் என்பதை இது நிரூபிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.