முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்திற்குத் தீர்வு காணும் நேரம் வந்து விட்டது- பிகேஆரின் சிவமலர் கணபதி தகவல்

11 பிப்ரவரி 2026, 8:40 AM
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்திற்குத் தீர்வு காணும் நேரம் வந்து விட்டது- பிகேஆரின் சிவமலர் கணபதி தகவல்

புத்ராஜெயா, பிப் 11: மலேசியாவில் பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு, நீதியான மற்றும் நிரந்தரமான தீர்வை எட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சிவமலர் கணபதி கூறினார்.

முந்தைய அரசாங்கங்களால் ஒத்திவைக்கப்பட்ட அல்லது நெருக்கடி நேரங்களில் மட்டும் கவனிக்கப்பட்ட இந்த 'மரபுவழிப் பிரச்சனைகளை' (Legacy Issues), தற்போதைய மடாணி அரசாங்கம் துணிச்சலுடனும் சமூக நீதியுடனும் அணுகத் தயாராக உள்ளது.

இது வெறும் மதச் சார்பு விவகாரம் அல்ல, மாறாக முறையான நிர்வாகம் மற்றும் சட்டப்பூர்வ அங்கீகாரம் சார்ந்த ஒரு சவாலாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாகத் தோட்டப்புறங்களில் அமைந்துள்ள ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் சட்டவிரோதமானவை என்று முத்திரை குத்தப்படுவதன் பின்னணியில் உள்ள வரலாற்று உண்மைகளை நாம் நேர்மையுடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலும் சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்பக் காலத்திலும், ரப்பர் மற்றும் தென்னைத் தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் ஆன்மீகத் தேவைகளுக்காகத் தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இவை கட்டப்பட்டன.

அக்காலகட்டத்தில் நில ஆவணங்கள் முறைப்படுத்தப்படாத நிலையில், பின்னாளில் அத்தோட்டங்கள் விற்கப்படும்போதும், 'டொரன்ஸ்' (Torrens) நிலப்பதிவு முறை அமல்படுத்தப்படும்போதும், பல தசாப்தங்களாக நிலைத்திருக்கும் இந்த வழிபாட்டுத் தலங்கள் திடீரென 'ஆக்கிரமிப்புகள்' என வகைப்படுத்தப்படுவது அநீதியானது.

அதே வேளையில், நாட்டின் சட்ட மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது. மத சுதந்திரம் என்பது சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு எங்கு வேண்டுமானாலும் புதிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கான அனுமதி அல்ல என்பதைப் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார் என்று சிவமலர் மேற்கோள்காட்டி கூறினார்.

முறையான அனுமதியின்றி புதிதாகக் கட்டப்படும் வழிபாட்டுத் தலங்களை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. எனவே, பழமையான வரலாற்றுத் தலங்களையும், புதிய விதிமீறல்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்காமல், ஒவ்வொரு வழக்கையும் அதன் பின்னணி, நில உரிமை மற்றும் சமூகத் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.