வழிபாட்டுத் தலங்கள் விவகாரம்: சிலாங்கூர் ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் - டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தகவல்

11 பிப்ரவரி 2026, 6:52 AM
வழிபாட்டுத் தலங்கள் விவகாரம்: சிலாங்கூர் ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் - டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தகவல்

ஷா ஆலாம், பிப் 11- வழிபாட்டுத் தலங்கள் கட்டுவதற்கான ஒவ்வொரு விண்ணப்பத்தையும் உள்ளூராட்சி மன்றங்கள் (PBT) நியாயமாகவும், வெளிப்படையாகவும், முறையாகவும் ஆராய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சியாளர் மேன்மை தங்கிய சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்கள் அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிலாங்கூர் சுல்தான் விடுத்த ஆணைக்கு டத்தோ மந்திரி புசார், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சிலாங்கூர் சுல்தானின் இந்த ஆணை, புத்தம், கிறிஸ்தவம், இந்து, சீக்கியம் மற்றும் தாவோயிசம் (லிமாஸ்) மீதான சிறப்புக் குழுவின் கீழ் செயல்படுத்தப்படும் மாநில அரசின் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“மேன்மை தங்கிய சுல்தானின் இந்த அக்கறை, தொடர்புடைய மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களின் தொடர் நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். நன்றி, மேன்மை தங்கிய சுல்தானே,” என்று அவர்  தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, சிலாங்கூர் சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் டத்தோ முகமது முனீர் பானி, மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்கள் கட்டும் விவகாரத்தை நிர்வகிப்பதில் தற்போதுள்ள அனைத்து சட்ட விதிகளும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், அவை புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் சுல்தான் வலியுறுத்தியதாகத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான மற்றொரு வளர்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறையான அமைப்பின் மூலம், சட்ட அமலாக்கத்தையும், தகராறுகளைத் தீர்ப்பதற்கான மத்தியஸ்த முறைகளையும் இணைத்து, சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களின் சிக்கலை சிலாங்கூர் தொடர்ந்து கையாளும் என்று அமிருடின் கூறினார்.

மத பின்தொடர்பாளர்களிடையே நல்லிணக்கத்தைத் தொடர்ந்து பேணுவதை உறுதிசெய்யும் வகையில், சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களைக் கட்டுப்படுத்த மாநில அளவிலான குழுவின் மூலம் அதிகாரப்பூர்வ அமைப்பை மாநில அரசு பராமரித்து வருகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.