கோலாலம்பூர், பிப் 7: இன்று நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான 'மோட்டோ ஜிபி' (MotoGP) பருவத் தொடக்க விழாவை முன்னிட்டு, கோலாலம்பூர் மாநகரின் முக்கியச் சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவின் தலைவர் முகமட் ஜம்சூரி முகமட் ஈசா தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு தடையின்றி நடைபெறுவதையும் சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, கோலாலம்பூர் மாநகராட்சி இன்று மதியம் 2 மணி முதல் நள்ளிரவு வரை படிப்படியாகச் சாலைகளை மூடும் என்று அவர் கூறினார்.ஜாலான் அம்பாங் பகுதியில், ஜாலான் பி. ரம்லீ அல்லது யாப் குவான் செங் சந்திப்புகளில் இருந்து ஜாலான் மாயாங் சந்திப்பு வரையிலான நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளும், ஜாலான் பி. ராம்லீ சந்திப்பிலிருந்து ஜாலான் பெர்சியாரான் கேஎல்சிசி (KLCC) செல்லும் நுழைவு வழிகளும் மூடப்படும். குறிப்பாக, கே எல் சிசி அருகே உள்ள ஜாலான் பி. ராம்லீ சாலை, ஜாலான் அம்பாங் சந்திப்பிலிருந்து ஜாலான் பினாங் சந்திப்பு வரை முழுமையாக மூடப்படும் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பொதுமக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு மாற்றுச் சாலைகளைப் பயன்படுத்துமாறும், பணியிலுள்ள காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
கோலாலம்பூரின் அடையாளமாகத் திகழும் பகுதிகளில் நடைபெறும் இந்த மோட்டோ ஜிபி பருவத் தொடக்கம், உலகத்தரம் வாய்ந்த மோட்டார் விளையாட்டுப் பருவத்தின் ஆரம்பத்தைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல், கோலாலம்பூரை ஒரு நவீன மற்றும் ஆற்றல்மிக்க உலகளாவிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சாலை மறிப்புகளால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அரச மலேசிய காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது


