கோலாலம்பூர், ஆக. 13 எதிர்வரும் அக்டோபர் 24 முதல் 26 வரை நடைபெறும் 2025 மலேசியன் கிராண்ட் பிரிக்ஸ் (ஜி.பி.) உலக மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் (மோட்டோஜிபி) 200,000 பார்வையாளர்களை ஈர்க்க சிப்பாங் அனைத்துலகப் பந்தயத் தடம் (எஸ்.ஐ.சி.) இலக்கு கொண்டுள்ளது.
முந்தைய பந்தயத்தோடு ஒப்பிடும்போது இம்முறை அதிக ரசிகர்கள் எண்ணிக்கை இலக்கை நிறுவனம் அறிவித்திருந்தாலும் இந்த ஆண்டு அதனை அடைய உறுதியாக இருப்பதாக எஸ்.ஐ.சி. தலைமை நிர்வாக அதிகாரி அஜான் ஷப்ரிமான் ஹனிப் கூறினார்.
கடந்தாண்டு நடைபெற்ற மலேசிய ஜிபி மூன்று நாள் நிகழ்வில் 184,923 வருகையாளர்களை அது பதிவு செய்தது.
விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கையில் 75 விழுக்காட்டை நாங்கள் எட்டியுள்ளோம். மேலும் இவ்வாண்டு முதல் முறையாகப் பந்தயத்திற்கு முந்தைய மின்னணு நடன இசை (இ.டி.எம்.) விழா உட்பட சில அற்புதமான அம்சங்களை அறிமுகப்படுத்துகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
200,000 வருகையாளர்கள் என்ற இலக்கு மிகவும் துணிச்சலானது. ஆனால் நிச்சயமாக அனைவரின் ஆதரவுடன் அதனை அடைய முடியும் என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற 2025 மலேசிய ஜிபி அறிமுக விழாவில் கூறினார்.
இந்நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோவும் கலந்து கொண்டார். எதிர்வரும் அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பந்தயத்திற்கு முன்னதாக இரு மின்னணு நடன இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் 1.00 வெள்ளி தேசிய விளையாட்டு அறக்கட்டளை நிதிக்கு அனுப்பப்படும். இது மலேசிய விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு உதவும் நடவடிக்கையாகும் என்று அவர் சொன்னார்.


