கோலாலம்பூர், அக் 27: 2025ஆம் ஆண்டுக்கான மலேசியா கிராண்ட் பிரிக்ஸ் 2025 நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. அப்போட்டிக்கு மொத்தம் 195,000 பேர் வருகை தந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது உயர்ந்துள்ளது என சிப்பாங் சர்வதேச பந்தயச் சுற்றுப்பாதை (SIC) தலைமை செயல் அதிகாரி அஜான் ஷப்ரிமான் ஹனிப் தெரிவித்தார். மேலும் இந்த உயர்வு டிக்கெட் விற்பனை வருவாயிலும் நல்ல முன்னேற்றத்தைக் காட்டுவதாக அவர் கூறினார். ஆனால், வரவிருக்கும் ஆண்டிற்காக விற்பனைத் தந்திரங்களில் மேலும் மேம்பாடுகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
“‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற சலுகை முதல் நாளிலிருந்தே அறிமுகப்படுத்தப்பட்டது. மொத்த வருவாய் இன்னும் பெறப்படாத நிலையில் இருந்தாலும், தற்போதைய போக்கு கடந்த ஆண்டை விட நேர்மறையாக உள்ளது,” என்றார். ஆரம்பத்தில் போக்குவரத்து மூடல் மற்றும் வழித்தட மாற்றம் குறித்த கவலை இருந்ததாகவும், ஆனால் அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்பால் பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்ததாகவும் அவர் கூறினார்.
“பலர் நெரிசலைத் தவிர்க்க முன்பே வந்துவிட்டனர். போக்குவரத்து நெரிசல் ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
அடுத்த ஆண்டு, பந்தயத் திடலுக்குள் வாகன நுழைவு போக்குவரத்தை மேலும் ஒழுங்குபடுத்தும் திட்டம் உள்ளதாக அவர் கூறினார்.




