கோலாலம்பூர், பிப் 6: ஜாலான் ராஜாவில் அமைந்துள்ள சுல்தான் அப்துல் சமத் கட்டிடத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ராயல் சிலாங்கூர் கலைக்கூடத்தை, மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
இதனிடையே, நிகழ்வில் உரையாற்றிய டத்தோ யோங், 8,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்தக் கலைக்கூடம், 1850-ஆம் ஆண்டு முதல் ராயல் சிலாங்கூர் நிறுவனத்தின் பயணத்தையும், கோலாலம்பூரின் வளர்ச்சிக்கு பங்களித்த குடும்ப வரலாற்றையும் வெளிப்படுத்துவதாகக் கூறினார். "இந்தக் கலைக்கூடத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள், நம் மாநகரின் வளர்ச்சிக்கு வித்திட்ட முக்கிய காலகட்டங்களை இணைக்கும் கண்காட்சிகளைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க டத்தாரான் மெர்டேகாவை நோக்கியவாறு இந்தக் கலைக்கூடத்தின் சிற்றுண்டிச்சாலை அமைந்துள்ளது. 1957-இல் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, மலேசியக் கொடி ஏற்றப்பட்ட புகழ்பெற்ற நிகழ்வு நடந்த இடம் இதுவாகும் என்றும் அவர் கூறினார். இந்தக் கண்காட்சி, ஐரோப்பிய மற்றும் ஆசியத் தாக்கங்களின் சங்கமத்தைப் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்றுச் சான்றாகத் திகழ்கிறது என்றும் யோங் மேலும் தெரிவித்தார்.
"1979-ஆம் ஆண்டில், மாட்சிமை தங்கிய மறைந்த சுல்தான் சலாஹுடின் அப்துல் அஜிஸ் ஷா அவர்களால் வழங்கப்பட்ட 'ராயல்' எனும் அரச ஈயப் பாத்திர உற்பத்தியாளர் என்ற பட்டம், நம்பிக்கை மற்றும் சிறப்பிற்கான பிணைப்பை எவ்வாறு வலுப்படுத்தியது என்பதைப் பார்வையாளர்கள் காண முடியும்," என்றார் யோங்.
நாட்டின் உருவாக்கத்தின் சின்னங்களாக விளங்கும் முக்கிய அடையாளங்களின் பிரதிகளும் இந்தக் கலைக்கூடத்தில் இடம்பெற்றுள்ளன. இது, மலேசியாவின் பொருளாதாரம் மற்றும் சமூகப் பரிணாம வளர்ச்சியுடன் ராயல் சிலாங்கூர் கொண்டுள்ள நெருங்கிய தொடர்பை பார்வையாளர்களுக்கு நினைவூட்டுகிறது.
மேலும், கோலாலம்பூரின் ஈயச் சுரங்க வரலாற்றிலிருந்து வேரூன்றிய பொருளாதாரப் பாரம்பரியம், படைப்பாற்றல் மற்றும் தொழில் முனைவோர் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், ஈயப் பாத்திரங்கள் உருவாக்கப்படுவதைப் பார்வையாளர்கள் கண்டுகளிக்கவும் இங்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.


