ஷா ஆலம், பிப்ரவரி 5 — கிள்ளான், மேற்கு துறைமுகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் RM916,156.02 ரிங்கிட் மதிப்புள்ள 44.6 டன் எடையுள்ள உறைவிக்கப்பட்ட பன்றி இறைச்சி, வாத்து இறைச்சி மற்றும் காப்பி கொட்டைகளை எல்லைப் பாதுகாப்பு கட்டுப்பாட்டு முகமை பறிமுதல் செய்தது. விலங்கு நோய்கள் பரவும் அபாயத்தைத் தடுப்பதற்கும், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார நலனை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக கிள்ளான் துறைமுக AKPS தளபதி டத்தோ நிக் எசானி முகமட் பைசல் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட 16.1 டன் வாத்து இறைச்சியும் 24.9 டன் பன்றி இறைச்சியும் மேற்கு ஐரோப்பாவில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்றும், அவை மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறையின் முறையான இறக்குமதி அனுமதி இன்றி கொண்டு வரப்பட்டவை என்றும் அவர் கூறினார். அதே வேளையில், லத்தீன் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3.5 டன் காபி கொட்டைகள், சட்டப்படி தேவையான பாமா சான்றிதழ் இன்றி கொண்டு வரப் பட்டதும் கண்டறியப்பட்டது.
இதன் மதிப்பு சுமார் RM100,608.33 ஆகும். நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையான்மையை பாதுகாக்கும் வகையில், தடை செய்யப்பட்ட மற்றும் விதிமுறைகளை மீறி கொண்டு வரப்படும் பொருட்களைத் தடுப்பதில் கிள்ளான் துறைமுக AKPS தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கு 2011-ஆம் ஆண்டு மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.


