ஷா ஆலம், பிப் 4: தீபகற்ப மலேசியாவின் சில பகுதிகளில், குறிப்பாக வடக்கு மாநிலங்களில் வெப்பமான காலநிலையும் குறைவான மழையும் வரும் செவ்வாய்க்கிழமை வரை தொடரும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா கணித்துள்ளது.
மேற்கு தீபகற்பப் பகுதிகள் மற்றும் சபா, சரவாக்கின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றாலும், ஒட்டுமொத்தமாக வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜனவரி 31 வரை மட்டுமே இந்த வெப்ப நிலை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கெடாவின் நான்கு மாவட்டங்களான குவாலா மூடா, பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு தொடர்ச்சியான வெப்ப காலநிலை காரணமாக முதலாம் நிலை (Tahap 1) அல்லது விழிப்புநிலை எச்சரிக்கப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் தினசரி அதிகபட்ச வெப்பநிலையானது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
தினசரி வெப்பநிலை இந்த அளவை எட்டும்போது, அது பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால் விழிப்புநிலை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. குறிப்பாகச் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தற்போதைய துல்லியமான தகவல்களைப் பெற வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது 'myCuaca' செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


