மின்னியல் விலைப்பட்டியல் (e-Invois): அறிக்கை செய்யப்படாத RM1.4 பில்லியன் வருமானத்தை மலேசிய உள்நாட்டு வருமான வரி வாரியம் கண்டறிந்துள்ளது

3 பிப்ரவரி 2026, 9:35 AM
மின்னியல் விலைப்பட்டியல் (e-Invois): அறிக்கை செய்யப்படாத RM1.4 பில்லியன் வருமானத்தை மலேசிய உள்நாட்டு வருமான வரி வாரியம் கண்டறிந்துள்ளது

புத்ராஜெயா, பிப் 3: கடந்த 2024 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வந்த மின்னியல் விலைப்பட்டியல் (e-Invois) முறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக, இதுவரை அறிக்கை செய்யப்படாத சுமார் RM1.4 பில்லியன் வருமானத்தை மலேசிய உள்நாட்டு வருமான வரி வாரியம் (LHDN) கண்டறிந்துள்ளது.

வரி வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய வரிப் பதிவுகளுடன் ஒத்துப் போகாத வகையில், அதிக நிதி வசதி கொண்ட சுமார் 500,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் பல நபர்கள் தங்களின் வருமானம் குறித்து வரி வாரியத்திற்கு எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தங்கள் வரித் தகவல்களில் ஏதேனும் தவறுகள் அல்லது விதிமுறை மீறல்கள் இருந்தால், வரி செலுத்துவோர் அதனைத் தாமாகவே முன்வந்து அறிவிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், வரி வாரியம் தணிக்கைகளை நடத்தி எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது. "இதுவரை வருமான வரிப் படிவங்களைச் சமர்ப்பிக்காத 17,188 வரி செலுத்துவோர் தாங்களாகவே முன்வந்து, முந்தைய ஆண்டுகளுக்கான 1.4 பில்லியன் வெள்ளி வருமானத்தை அறிக்கை செய்துள்ளனர். இதன் மூலம் 290 மில்லியன் வெள்ளி வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

மின்னியல் விலைப்பட்டியல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல், இதுவரை 184,325 வரி செலுத்துவோர் இம்முறையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 979 மில்லியன் மின்னியல் விலைப்பட்டியல்கள் வழங்கப்பட்டுள்ளன. மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) உட்பட பல வணிகங்கள், தங்களின் வணிக நடவடிக்கைகளைத் தரவுமயமாக்கவும், பரிவர்த்தனைகளைச் சீராகப் பதிவு செய்யவும் இம்முறையை நல்ல முறையில் வரவேற்றுள்ளதாக வரி வாரியம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், வரி விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் மற்ற வரி செலுத்துவோருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், வருமானத்தை மறைப்பவர்கள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வரி வாரியம் எச்சரித்துள்ளது. தரவு மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வரி ஏய்ப்பு செய்பவர்களை எளிதில் கண்டறிய முடியும் என்றும் அது குறிப்பிட்டது.

எனவே, வரி செலுத்துவோர் அனைவரும் தங்களின் வரித் தகவல்கள் துல்லியமாகவும் முழுமையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், 1967-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராதங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அந்த அறிக்கையில் நினைவூட்டப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.