பெட்டாலிங் ஜெயா, டிச 16 — கடந்த நவம்பர் 30 நிலவரப்படி, RM14.55 பில்லியன் மதிப்பிலான வரியை கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு உள்நாட்டு வருமான வாரியம் (LHDN) திருப்பி செலுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை 3.47 மில்லியன் வழக்குகளை உள்ளடக்கியது என துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட RM12.39 பில்லியன் வரியைக் காட்டிலும் இந்த ஆண்டு அதன் தொகை 17.5% உயர்வைக் காட்டுவதாக அவர் கூறினார்.
இதுவரை 3.3 மில்லியன் பேருக்கு பணம் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டு விட்ட நிலையில் அதற்கான தொகை RM13 பில்லியனை கடந்துள்ளதாக அவர் மேலவையில் 2025 நிதி மசோதா குறித்த விவாதத்தை நிறைவு செய்யும் போது கூறினார்.
மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ளவர்களுக்கு வரிப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. கணக்குத் தணிக்கைக்கு முன்பே அவற்றைத் திருப்பிச் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டதாக துணையமைச்சர் மேலவையில் தெரிவித்தார்.


