கோலாலம்பூர், ஜன 20- மலேசியாவின் முன்னணி கட்டுமான நிறுவனமான ஐஜேஎம் கார்ப்பரேஷன் பெர்ஹாட் (IJM Corp Bhd), தனது தலைமை அலுவலகத்திற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) மற்றும் உள்நாட்டு வருமான வரி வாரிய (LHDN) அதிகாரிகள் வருகை தந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட விசாரணை நிமித்தமாகத் தகவல் சேகரிக்கவே இந்த அதிகாரிகள் வருகை தந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகப் புருசா மலேசியாவிற்கு (Bursa Malaysia) வழங்கிய விளக்கத்தில், விசாரணை அதிகாரிகளுக்கு நிறுவனம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும், இந்தச் சூழலிலும் நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகள் எந்தத் தடையுமின்றி வழக்கம் போல் இயங்கும் என்றும் உறுதியளித்துள்ளது.
நிர்வாக ரீதியான வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் சிறந்த நிர்வாகக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் ஐஜேஎம் நிறுவனம் எப்போதும் உறுதியாக உள்ளது.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட முன்னேற்றங்களை நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருந்தால் அது குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஐஜேஎம் நிறுவனத்தின் உயர் மட்ட நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட சுமார் 2.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பிரம்மாண்ட பணமோசடித் திட்டம் குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக 'ஸ்கூப்' (Scoop) செய்தித் தளம் தகவல் வெளியிட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய 'முக்கிய நபர்களாக' (Persons of Interest) இரண்டு அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் இருவரும் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகத் தெரிகிறது.
பிரித்தானியாவின் 'சீரியஸ் ஃபுராட் ஆபிஸ்' (SFO) அமைப்பு, இந்த இரு நபர்களுடன் தொடர்புடைய பல பில்லியன் ரிங்கிட் முதலீட்டு நடவடிக்கைகளில் முறைகேடு மற்றும் பணமோசடி நடந்துள்ளதாகத் தொடங்கிய விசாரணையைத் தொடர்ந்தே, மலேசியாவிலும் இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையில், ஐஜேஎம் நிறுவனம் மீதான விசாரணை நடைபெற்று வருவதை ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார். மேலதிக விவரங்கள் அவ்வப்போது வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



