ஷா ஆலம், பிப் 3 - KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) நிறுவனம், தனது வலைதளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் அனைத்து குப்பை சேகரிப்பு அட்டவணைகளையும் பதிவேற்ற உள்ளது. இது, பொதுமக்களுக்குக் குப்பை சேகரிப்பு தகவல்களில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்கும்.
மேலும், இந்த நடவடிக்கை, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 12 ஊராட்சி மன்றங்களின் போர்டல்களை அணுகாமல், மக்கள் நேரடியாக தகவலைப் பெற உதவும் என KDEBWM நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முகமட் தாஹிர் கூறினார்.
“முன்பு நாங்கள் அட்டவணைகளைக் கவுன்சில் உறுப்பினர்கள் அல்லது ஒற்றுமை நிர்வாகக் குழு வாயிலாக பகிர்ந்திருந்தோம்.
“பொதுமக்கள் தெளிவற்ற தகவல் குறித்து குழப்பம் அடைவதனால், இனி அந்த அட்டவணைகளை சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் நேரடியாகப் பதிவிடுவோம்,” என்று அவர் தெரிவித்தார்.
இடஙக்ளின் அடிப்படையில் அட்டவணைகளைப் பதிவேற்றுவது, மக்கள் குப்பை நிர்வாகத்தை மேலும் திறமையாக திட்டமிட உதவும் என்று டத்தோ ரம்லி வலியுறுத்தினார்.
“தெளிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய தகவல், பொதுமக்களுக்கு ஏற்படும் குழப்பத்தைக் குறைக்கும். அதே நேரத்தில் குப்பை சேகரிப்பு நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்தும்,” என்று அவர் கூறினார்.
மேலும், சிலாங்கூரில் உள்ள பழைய நீல-வெள்ளை நிறக் அறிவிப்பு பலகைகளுக்குப் பதிலாகப் புதிய சிவப்பு-மஞ்சள் நிறப் பலகைகளை மாற்ற KDEBWM திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் குறைந்தது இரண்டு பலகைகள், நுழைவுச் சாலையிலும் வெளியேறும் சாலையிலும் வைக்கப்படும்.
“KDEBWM தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 6,000 முதல் 8,000 வரை குப்பை சேகரிப்பு அட்டவணைப் பலகைகளை நிறுவியுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பொதுமக்கள் iClean Selangor என்ற கைப்பேசி செயலியைப் பயன்படுத்தி, புகார்களைச் சமர்ப்பிக்கவும், குப்பை சேகரிப்பு போன்ற சேவைகளை கோரவும் முடியும்.


