கோல லங்காட், ஜன 26 - கடந்த 2024 முதல் 2025 வரை மோரிப் சட்டமன்ற தொகுதியில் இந்திய சமூக தலைவராகப் பணியாற்றி வந்த எலிசா சாம்சன் எமேனுவல் தற்போது கோல லங்காட் நகராண்மை கழக உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய சமூக தலவராகப் பணியாற்றிய போது அவர் தனது பகுதியில் உள்ள மக்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்குப் பல உதவிகளை செய்து வந்துள்ளார். அதன் பயனாக உலு லங்காட் நகராண்மை கழக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எலிசா சாம்சன் தனது எதிர்கால திட்டங்களைப் பற்றி மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.
முதலில், தனது பகுதியில் உள்ள மக்கள் நலனில் அக்கறை செலுத்தப்படும் என்றார் அவர். இங்கு வசிக்கும் மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் வழங்கும் அனைத்து உதவிகளும் மக்களை சென்றடைவதை உறுதி செய்வதோடு, அந்த உதவிகளுக்கு மக்கள் சரியான முறையில் விண்ணப்பம் செய்வதில் தாம் உதவ உள்ளதாக அவர் கூறினார். தற்போது அனைத்து உதவிகளுக்கும் இணையம் வழி விண்ணப்பம் செய்ய வேண்டியிருப்பதனால், மக்களுக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வு தேவை என்றார் எலிசா சாம்சன்.
அதனை தொடர்ந்து, கோல லங்காட்டில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக தன்முனைப்பு கருத்தரங்குகள் மற்றும் முகாம்களை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களை சரியான பாதையில் இட்டு செல்ல மிகவும் துணைபுரியும் எலிசா சாம்சன் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையில், கோல லங்காட் நகராண்மை கழக உறுப்பினர் என்ற முறையில், எதிர்காலத்தில் விளையாட்டு துறையிலும் பல திட்டங்களை மேற்கொள்ள தான் எண்ணம் கொண்டுள்ளதாக அவர் சொன்னார். தற்போது பல விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர். இந்த திட்டம் மூலம் இளைஞர்களை அதிக அளவில் விளையாட்டு துறையில் ஈடுபட ஊக்குவிக்க முடியும் என்றார் அவர்.
இறுதியாக, நம் இளைஞர்கள் எதிர்காலத்தில் மக்கள் சேவை துறையில் அதிகம் ஈடுப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் இந்தியர்களின் உரிமைக்காக நாம் சரியான முறையில் போராட இயலும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


