ஈக்கள் தொல்லையால் கோலா லங்காட்டில் கோழிப் பண்ணைகள் மீது நடவடிக்கை

19 மே 2026, 5:59 AM
ஈக்கள் தொல்லையால் கோலா லங்காட்டில் கோழிப் பண்ணைகள் மீது நடவடிக்கை

ஷா ஆலம், மே 19: கோலா லங்காட் பகுதியில் ஈக்கள் மொய்க்கும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த பல கோழிப் பண்ணைகளுக்கு எதிராக, கோலா லங்காட் நகராண்மைக் கழகம் (MPKL) அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கம்போங் கஞ்சோங் தெங்கா, கம்போங் தொங்கா மற்றும் கம்போங் கெலானாங் ஆகிய கிராமப்புறப் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளை இலக்காகக் கொண்டு இந்தச் சிறப்பு நடவடிக்கை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது, சம்பந்தப்பட்ட பண்ணைகளில் ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்கான எவ்வித முறையான பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பதும், இதனால் அப்பகுதிகளில் கட்டுப்பாடற்ற முறையில் ஈக்கள் பெருகி இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த ஈக்களின் தொல்லையானது சுற்றுப்புறச் சூழலுக்கும், அங்கு வாழும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருவதாக கோலா லங்காட் நகராண்மைக்கழகம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்கான நோட்டீஸ்கள் பண்ணை உரிமையாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது உட்பட பல கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டன.

மேலும், பண்ணைகளில் உடனடியாகவும் முறையாகவும் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கும், ஈக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஏதுவாக பண்ணைகளைச் சுற்றித் தடை நாடாக்கள் (Barrier Tape) கட்டப்பட்டு அவை தற்காலிகமாக முடக்கப்பட்டன.

கோலா லங்காட் நகராண்மைக் கழகத்தின் (MPKL) திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை, அமலாக்கத்துறை மற்றும் கோலா லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த கூட்டுச் சோதனையை நடத்தின.

1976ஆம் ஆண்டு உள்ளூர் அரசாங்கச் சட்டத்தின் பிரிவு 80-இன் கீழ் இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பண்ணை உரிமையாளர்கள் உடனடியாக இந்த ஈக்கள் தொல்லையை ஒழித்து, தூய்மைத் தரநிலைகளுக்குக் கட்டுப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நகராண்மைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இது தவிர, உரிமம் இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த கோழிப் பண்ணைகளுக்கு 2007ஆம் ஆண்டு எம்டிகேஎல் (MDKL) வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை துணை விதிகளின் கீழும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

இந்த உத்தரவுகளைப் பண்ணையாளர்கள் பின்பற்றத் தவறினால், எவ்வித சமரசமும் இன்றி அவர்களுக்கு எதிராக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும், பண்ணைகள் விதிகளுக்குக் கட்டுப்படுவதை உறுதி செய்யத் தொடர் கண்காணிப்புப் பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்படும் என்றும் கோலா லங்காட் நகராண்மைக் கழகம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.