ஷா ஆலம், ஜன 23 - காற்பந்துப் விளையாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்ற பிஃபா உலகக் கிண்ணம் கடந்த புதன்கிழமை மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த கிண்ணம் மலேசியாவுக்கு கடைசியாக 2014ஆம் ஆண்டு பிரேசில் நடக்கவிருந்த பிஃபா உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷா ஆலாமில் உள்ள Skypark அனைத்துலக விமான நிலையத்தில் புதன்கிழமை இந்த கிண்ணம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் 2002 உலகக் கிண்ணம் வென்ற பிரேசிலிய ஜாம்பவான் கில்பர்டோ சில்வா கலந்து கொண்டார். .
இந்த கிண்ணத்தின் வருகை மலேசியா இளம் கால்பந்து வீரர்களுக்கும் ஹரிமாவ் மலாயா அணிக்கும் ஊக்கமளிக்கும் என சில்வா நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையில், குளிர்பான நிறுவனத்தின் ஆசியான் மற்றும் தெற்கு பசிபிக் செயல்பாட்டு பிரிவின் தலைவர் சல்மான் கரீகவும் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் கே.நகுலேந்திரனும் உலகக் கிண்ணத்தைக் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர், இக்கிண்ணத்தை மலேசிய கால்பந்து ரசிகர்களுக்கும் காட்சிப்படுத்தும் நோக்கில் பிற்பகலில் சன்வே பைரமிட் பேரங்காடியில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இதனை காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர்.
மலேசியாவை அடுத்து இந்த பிஃபா உலகக் கிண்ணம் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 பிஃபா உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியை முன்னிட்டு இந்த கிண்ணம் சுமார் 75 நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்னாமா


