ஷா ஆலம், ஜன 22: கடந்த திங்கட்கிழமை, அம்பாங் ஜெயா, பண்டான் மேவா பகுதியில் பல மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.
நேற்று காலை 9 மணிக்கு சமூக ஊடக இணைப்பின் மூலம் குறிப்பிட்ட காணொளியைக் காவல்துறையினர் கண்டறிந்ததாக அம்பாங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் கைருல் அனுவார் காலிட் கூறினார்.
இச்சம்பவம் ஜனவரி 20ஆம் தேதி அதிகாலை 4.21 மணிக்கு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"இதுவரை, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்களிடமிருந்து காவல்துறைக்கு ஆறு புகார்கள் வந்துள்ளன," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக, அதே நாளில் இரவு 9.41 மணிக்கு சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நடவடிக்கைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை மற்றும் சந்தேக நபர் சுற்றியுள்ள பகுதியை தூங்கும் இடமாக அடிக்கடி பயன்படுத்திய வீடற்ற நபர் என்றும் நம்பப்படுவதாகக் கைருல் அனுவார் கூறினார்.
தீ வைத்து தீங்கு விளைவித்ததற்காக தண்டனைச் சட்டப் பிரிவு 435 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், சந்தேக நபருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.


