கோலாலம்பூர், ஜன 22 – எதிர்வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தின் சிறப்புத் தரிசன நேரங்கள் மற்றும் செயல்பாட்டு அட்டவணையை ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

2026 ஜனவரி 16 முதல் பிப்ரவரி 13 வரையிலான திருவிழாக் காலத்தில் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தத் திருவிழாக் காலத்தில் ஆலயம் தினசரி அதிகாலை 4:00 மணிக்குத் திறக்கப்பட்டு, இரவு 10:00 மணிக்கு நடை சாத்தப்படும்.
தினசரி வழிபாட்டு முறைகளின்படி, அதிகாலை 4:30 முதல் 5:30 மணி வரையிலும், மாலை 4:00 முதல் 4:30 மணி வரையிலும் அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிகாலை 4:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத்தை முன்னிட்டு, ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் ஆலயம் தொடர்ந்து 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று தேவஸ்தானம் உறுதிப்படுத்தியுள்ளது.


