அலோர் ஸ்டார், ஜன 22 - எதிர்வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு சிறப்பு விடுமுறையைக் கெடா மாநில அரசு அறிவித்துள்ளது.மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ முகமட் சனுசி முகமட் நோர் தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தச் சிறப்பு விடுமுறையானது 1951-ஆம் ஆண்டு பொது விடுமுறைச் சட்டத்தின் (சட்டம் 369) பிரிவு 9(1)-இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில அரசாங்கத்தின் துணைச் செயலாளர் (மேலாண்மை) டத்தோ டாக்டர் நட்ஸ்மான் முஸ்தபா கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புக் கடிதம் அனைத்து மாநில மற்றும் மத்திய அரசுத் துறைத் தலைவர்கள், சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டதுடன், மந்திரி புசார் முகமட் சனுசியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது.
மாநிலத்தின் இந்து சமய மக்கள் தைப்பூசத் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவதை உறுதி செய்யும் வகையில் இந்த விடுமுறை அறிவிப்பு அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.


