2025ஆம் ஆண்டில் 16,111 தீ விபத்துகள் பதிவு

21 ஜனவரி 2026, 7:16 AM
2025ஆம் ஆண்டில் 16,111 தீ விபத்துகள் பதிவு

ஈப்போ, ஜன 21 - கடந்த 2025ஆம் ஆண்டு, நாடு முழுவதும் மொத்தம் 16,111 தீ விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 98 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை தலைமை இயக்குநர் டத்தோ அகமட் இஸ்ராம் ஒஸ்மான் தெரிவித்தார்.

தீ விபத்துகளால் ஏற்பட்ட சொத்து இழப்பின் மதிப்பு சுமார் RM2.09 பில்லியன் ஆகும். அதே நேரத்தில், மீட்புப் படையினரின் துரிதமான நடவடிக்கைகளால் RM6.44 பில்லியன் மதிப்புள்ள சொத்துகள் காப்பாற்றப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

“புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கட்டிட தீ விபத்துகள், 76 சதவீதம் அல்லது 12,292 சம்பவங்களாகப் பதிவாகியுள்ளன. அதே வேளையில், வாகன தீ விபத்துகள் 24 சதவீதம் அல்லது 3,819 சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

“இந்த சம்பவங்களுக்கு முதன்மை காரணமாக குப்பை எரிக்கும் நடவடிக்கை (34.4 சதவீதம்) உள்ளது. அதனைத் தொடர்ந்து சிகரேட் துண்டுகள் (25 சதவீதம்), மின்சாரம் (18.6 சதவீதம்) ஆகியவை காரணங்களாக இடம்பெறுகின்றன,” என அவர் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கட்டிட தீ விபத்துகள் பிரிவில், வீடுகள் 55.4 சதவீதத்துடன் அதிகமாகப் பதிவாகியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து வணிக வளாகங்கள் (19 சதவீதம்) மற்றும் தொழிற்சாலைகள் (9.2 சதவீதம்) உள்ளன என்றும் அகமட் இஸ்ராம் கூறினார்.

மாநிலங்களின் அடிப்படையில், சிலாங்கூர் அதிகமான எண்ணிக்கையைப் (3,457 சம்பவங்கள்) பதிவு செய்துள்ளது. அதில் RM543.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜோகூர் (3,056 சம்பவங்கள், RM477.3 மில்லியன்), பேராக் (1,345 சம்பவங்கள், RM107.4 மில்லியன்), கோலாலம்பூர் (1,356 சம்பவங்கள், RM79.3 மில்லியன்) மற்றும் பினாங்கு (976 சம்பவங்கள், RM99.3 மில்லியன்) ஆகியவை இடம்பெறுகின்றன.

“சபா மாநிலத்தில் உயிரிழப்புகள் அதிகமாகப் பதிவாகியுள்ளது. அங்கு மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜோகூர் (17 பேர்), சிலாங்கூர் (14 பேர்), பினாங்கு (ஏழு பேர்), பேராக் மற்றும் கோலாலம்பூரில் தலா ஐந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன,” என அவர் கூறினார்.

பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உறுதி செய்ய, தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு கல்வி மற்றும் சமூகத் தயார்நிலையை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அகமட் இஸ்ராம் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.