கோலாலம்பூர், ஜன 21: சரவாக் உள்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான அடையாள ஆவண விண்ணப்பங்களில் 12,509 விண்ணப்பங்களை சிறப்பு பணிக்குழு (PPK) மூலம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் (KDN) தெரிவித்துள்ளது.
இந்த பணிக்குழு, சரவாக் மக்களிடையே அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லாமை தொடர்பான பிரச்சனைகளை கையாள அமைக்கப்பட்டது.
கடந்த 2023 ஜூலை மாதம் முதல் தற்போது வரை PPK மூலம் மொத்தம் 13,224 விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் 12,509 விண்ணப்பங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில்; மீதமுள்ள 715 விண்ணப்பங்கள் இன்னும் செயல்முறையில் உள்ளன என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மலேசியா ஒரு முன்னேறிய மற்றும் வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும், இன்னும் சில குடிமக்கள் பிறப்புச் சான்றிதழ் அல்லது மைகார்ட் இல்லாமல் இருப்பதாகவும், இதனால் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட வாழ்க்கை செயல்பாடுகள் கடினமாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“அதிகாரிகள் அலுவலகத்தில் காத்திருப்பதில்லை; அவர்கள் நேரடியாக வீடு வீடாக சென்று ஆவணங்கள் இல்லாதவர்களைத் தேடி வருகின்றனர்.
ஆவணங்கள் இல்லாத நிலையில், வாழ்க்கை கடினமாகிறது. பள்ளிக்குச் செல்லவும், நோய்க்கு மருத்துவமனைக்கு செல்லவும் செலவுகள் அதிகமாகும்,” என அவர் நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி பதில் அமர்வில் தெரிவித்தார்.
-பெர்னாமா


