கோலாலம்பூர், ஜனவரி 2- சரவாக் மாநிலத்தில் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை அதிகரித்துள்ளது, அதேவேளையில் ஜோகூரில் குறைந்துள்ளது.
சரவாக்கில், இன்று காலை 8 மணி நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 791 ஆக இருந்த நிலையில், 286 குடும்பங்களைச் சேர்ந்த 1,136 பேராக அதிகரித்துள்ளது.
சரவாக் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் கூச்சிங்கில் உள்ள கம்போங் சினார் புடி பாருவில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் எட்டு மற்ற தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் உள்ளனர்.
ஜோகூர், சிகாமட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி நேற்று 136 ஆக இருந்த நிலையில், 36 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேராக சற்று குறைந்துள்ளது.
மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டத்தோ அஸ்மான் ஷா அப்துல் ரஹ்மான் கூறுகையில், அவர்கள் ஐந்து தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிகாமட்டில் உள்ள இரண்டு ஆறுகள் அபாய அளவைத் தாண்டியுள்ளது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.








