டிக்டாக் வழி போலி முதலீட்டுத் திட்டம்: கோல திரங்கானுவில் இல்லத்தரசி 50,342 ரிங்கிட் இழப்பு

21 ஜனவரி 2026, 4:29 AM
டிக்டாக் வழி போலி முதலீட்டுத் திட்டம்: கோல திரங்கானுவில் இல்லத்தரசி 50,342 ரிங்கிட் இழப்பு

கோல திரங்கானு, ஜனவரி 21 – சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி, 57 வயதுடைய இல்லத்தரசி ஒருவர் 50,342 ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட கோலா திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் (ACP) அஸ்லி முகமட் நோர், கடந்த ஜனவரி 13ஆம் தேதி 'டிக்டாக்' (TikTok) செயலியில் காணப்பட்ட கவர்ச்சிகரமான முதலீட்டு விளம்பரத்தைக் கண்டு அந்தப் பெண் ஈர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் பெரும் லாபம் ஈட்டலாம் என்ற வாக்குறுதியை நம்பிய பாதிக்கப்பட்ட பெண், பின்னர் சந்தேக நபரைத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, வெறும் 350 ரிங்கிட் முதலீடு செய்தால், மூன்றே மணி நேரத்தில் 9,000 ரிங்கிட் வரை லாபம் ஈட்டலாம் என அவருக்கு ஆசை வார்த்தைகள் கூறப்பட்டுள்ளன.

"இந்த மோசடி கும்பலின் பேச்சை நம்பிய அந்த இல்லத்தரசி, ஆரம்பக் கட்டமாக சில பணப்பரிமாற்றங்களைச் செய்துள்ளார். அதன் பின்னர், அவரது முதலீட்டிற்கு லாபம் கிடைத்துவிட்டதாக மோசடி கும்பல் அவரிடம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஈட்டிய லாபத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், நிர்வாகக் கட்டணம் என்ற பெயரில் கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்," என்று அஸ்லி முகமட் நோர் விவரித்தார்.

பணத்தை மீட்கும் ஆவலில், பாதிக்கப்பட்ட பெண் தனது சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தி கடந்த ஜனவரி 14 முதல் நேற்று வரை மொத்தம் ஆறு தவணைகளில் பணத்தைச் செலுத்தியுள்ளார். ஆனால், பணத்தைச் செலுத்திய பிறகு சந்தேக நபரைத் தொடர்பு கொள்ள முடியாததாலும், செலுத்திய பணத்தையோ அல்லது லாபத்தையோ பெற முடியாததாலும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் நேற்று மாலை 6.14 மணியளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு தற்போது குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் (ஏமாற்றுதல்) விசாரணை செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.