அலோர் ஸ்டார், ஜன 20 - லங்காவிக்கு அருகில் அமைந்துள்ள புக்கிட் மாலுட் கப்பல் துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பயணிகளை ஏற்றிச் செல்லும் மூன்று பெர்ரிகள் தீயில் எரிந்தன.
நேற்றிரவு மணி 9.46க்கு தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து உடனடியாக சம்பவம் இடத்திற்கு 23 தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக லங்காவி தீயணைப்பு நிலைய அதிகாரி முகமட் சம்ரி அப்துல் கானி தெரிவித்தார்.
ஆறு பெர்ரிகள் சம்பந்தப்பட்ட இந்த தீ விபத்தில் இரண்டு பெர்ரிகள் சுமார் 80 விழுக்காடு எரிந்து நாசமானது. அதுமட்டுமில்லாமல், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கடலில் அடித்துச் செல்லப்பட்டது.
மற்றொரு படகு சுமார் ஐந்து விழுக்காடு எரிந்த வேளையில் இதர மூன்று படகுகள் தீ பரவுவதிலிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக அறிக்கை ஒன்றில் முகமட் சம்ரி தெரிவித்தார்.
தீயில் எரிந்த பெர்ரி கடலில் அடித்துச் செல்லப்பட்டபோதிலும் மீனவர்களின் உதவியோடு கரைக்கு இழுத்து வரப்பட்டது.
நேற்றிரவு மணி 11.07 அளவில் தீ கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அதிகாலை மணி 2.10 அளவில் தீயணைப்பு நடவடிக்கை முழுமையாக முடிவுற்றது.


