ஜித்ரா, ஜன 19: இன்று காலை அருகிலுள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் வடக்கு நோக்கிச் செல்லும் ஜித்ரா டோல் பிளாசாவில் தீப்பிடித்த காரில் இரண்டு பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாலை 1.05 மணிக்கு தனது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கெடா JBPM தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர், I மூத்த கண்காணிப்பாளர் அசார் முகமட் கூறினார்.
பின்னர், ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
“சம்பவ இடத்திற்கு வந்தவுடன், ஹோண்டா சிவிக் FD கார் ஒன்று 85 சதவீதம் எரிந்த நிலையில் காணப்பட்டது. அதில் ஓர் ஆணும் பெண்ணும் உடல் கருகிய நிலையில் கண்டறியப்பட்டனர்.
“தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு செபராங் நியோன்யா தன்னார்வ தீயணைப்புத் துறையின் (PBS) ஐந்து உறுப்பினர்களும் உதவினார்கள். "தீயை அணைக்கும் பணி அதிகாலை 1.23 மணிக்கு வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மீட்பு நடவடிக்கை அதிகாலை 4.15 மணிக்கு நிறைவடைந்தது.
- பெர்னாமா


