புக்கிட் காயூ ஹிதாம், ஜன 2: ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த மூன்று இளையோர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் கோன்வாய் செயலில் ஈடுப்பட்டிருந்த சமயத்தில், போதைப்பொருள் சோதனை நடவடிக்கையில் அவர்களை தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு முகமை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் முதல் நாளில் தாய்லாந்திலிருந்து திரும்பியது தெரிய வந்தது.
2026 புத்தாண்டை முன்னிட்டு பிற்பகல் 3 மணியளவில் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் (ICQS) சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக கெடா AADK இயக்குனர் கைருல் அன்வார் அகமட் தெரிவித்தார்.
காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கையில், 15 கார்கள் மற்றும் 25 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டதாகவும், அதே நேரத்தில் நாட்டின் எல்லைக்குள் நுழைந்ததும் 30 நபர்கள் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மொத்தம் 18 முதல் 39 வயதுக்குட்பட்ட 13 நபர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
அனைவரும் 1983ஆம் ஆண்டின் போதைப்பொருள் பழக்கம் மற்றும் தடைச் சட்டம் (Rawatan dan Pemulihan) பிரிவு 3(1)(a) கீழ் கைது செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
புக்கிட் காயூ ஹிதாம் போதைப்பொருள் எதிர்ப்பு பிரிவு போதைப்பொருள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என கைருல் அன்வார் தெரிவித்தார்.
“அவர்கள் இதை ஆரம்பத்தில் பொழுதுபோக்காகப் பயன்படுத்தலாம். ஆனால் இது தீவிர போதைப்பொருள் பழக்கத்திற்கு வழிவகுக்கும்,” என அவர் குறிப்பிட்டார்.








