கோலாலம்பூர், ஜனவரி 2: பன்முகத்தன்மையில் நல்லிணக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பதை உறுதி செய்வதோடு, மக்களின் நலனுக்காகப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மடாணி அரசாங்கம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு புதிய நம்பிக்கைகளை வரவேற்கும் வகையில், அரசாங்கம் மக்களுடன் இணைந்து முழு நம்பிக்கையுடன் முன்னேறும் என்று அவர் கூறினார். “இதுவே மலேசியாவுக்கான மடாணி அரசாங்கத்தின் உறுதிப்பாடு. புத்தாண்டு வாழ்த்துகள்!” என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார். அதே பதிவில், பிரதமர் ஒரு நிமிடம் 47 வினாடிகள் நீளமுள்ள காணொளி ஒன்றையும் பதிவேற்றினார். அதில் அவர் மலேசிய மக்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இது மலேசியா வருகை ஆண்டு 2026 (TMM 2026) பிரச்சாரத்திற்கான ஆரம்ப உந்துதலாகவும் அமைந்தது.
'Visit Malaysia 2026 Countdown Festival' ஏற்பாட்டின் மூலம் TMM 2026 பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இது கோலாலம்பூர் பெவிலியனில் கோலாகலமாக நடைபெற்ற ஒரு பெரிய அளவிலான புத்தாண்டு கொண்டாட்டமாகும். மேலும் பிரதமர் அன்வார் கலந்துகொண்ட இந்த நிகழ்வு நாட்டின் சுற்றுலாத் துறைக்கான ஆரம்ப உந்துதலைத் தூண்டும் முயற்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது 43 மில்லியன் அனைத்துலகப் பயணிகளின் வருகை என்ற இலக்கை நோக்கி, மலேசியாவை உலகின் முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்றும் இலக்கை குறிக்கிறது.


