கோத்தா கினபாலு, டிச 16- சபா, கோத்தா கினபாலுவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பல குழந்தைகளை தலைக்கவசத்தால் தாக்கி, உதைப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்தனர்.
குழந்தைகளைத் துன்புறுத்தி காயப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு குறித்த புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர் காசிம் மூடா தெரிவித்தார்.
"இச்சம்பவம் நேற்று இரவு சுமார் 11.55 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது. இதில் ஒரு மதரசாவைச் சேர்ந்த மாணவர் குழுவும் ஒரு வயது வந்த நபரையும் உள்ளடக்கியது," என்று அவர் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இவ்வழக்கு ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324-இன் கீழும், 2001ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-இன் கீழும் விசாரிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, காசிம் பொதுமக்களுக்கு எந்தவித ஊகங்களையும் செய்ய வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
"சம்பவம் தொடர்பான தகவல்களை வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.








