பெட்டாலிங் ஜெயா, டிச 16- மலேசிய வானிலை ஆய்வு மையம், இன்று தொடங்கி டிசம்பர் 18 வியாழக்கிழமை வரை பல மாநிலங்களில் மோசமான தொடர் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் மொஹம்மட் ஹிஷாம் மொஹமட் அனிப், கிளாந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்கள் முழுவதும் மோசமான தொடர் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுவதாகத் தெரிவித்தார்.
அதே எச்சரிக்கை பகாங் மாநிலத்தில் குவாந்தான், பெக்கான், ரோம்பின் ஆகிய பகுதிகளிலும், ஜொகூரில் மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய பகுதிகளிலும் உள்ளடக்கியுள்ளது.
"பேராக் (உலு பேராக், கோலா காங்சார்), பகாங் (கேமரன் மலை, லிப்பிஸ், ஜெராண்டுட், தெமெர்லோ, மாரான், பெரா) மற்றும் ஜொகூர் (செகாமட், குளுவாங், பொந்தியான், கூலாய், ஜோகூர் பாரு) ஆகிய மாநிலங்களில் அதே காலகட்டத்திற்கு தொடர் மழை எச்சரிக்கை (கவன நிலை) எதிர்பார்க்கப் படுகிறது.
"அதேவேளையில், பகாங் மாநிலத்தில் ரவூப் மற்றும் பெந்தோங், அத்துடன் சரவாக் மாநிலத்தில் கூச்சிங், செரியான், சமாரஹான், ஸ்ரீ அமான், பெத்தோங், சரிக்கே, சிபு மற்றும் முகாஹ் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை வரை தொடர் மழை எச்சரிக்கை (கவன நிலை) எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அதன்படி, பொதுமக்கள் சமீபத்திய வானிலை தகவல்களை மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம், myCuaca மொபைல் செயலி, மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் மேலதிக விவரங்களுக்கு மெட்மலேசியா தொலைபேசி எண் 1-300-22-1638 வழியாகப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.









