ஷா ஆலம், டிச 5 — நவம்பர் 27 முதல் ஆச்சே, மேற்கு சுமத்ரா மற்றும் வட சுமத்திராவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்குப் பின்னர் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த மூன்று மலேசியர்களில் இருவர் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
63 மற்றும் 64 வயதுடைய இருவரும் தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, இந்தோனேசியா வான்படை அவர்களை மேடானுக்கு கொண்டு வந்தது என வெளிநாட்டு அமைச்சகம் தகவல் வெளியிட்டது.
“இப்போது மேடானிலுள்ள மலேசிய துணைத் தூதரகம் அவர்கள் தாய்நாட்டிற்கு திரும்பும் ஏற்பாடுகளை மேற்கொள்கிறது. இதேவேளை, 64 வயது கொண்ட மற்றொரு மலேசிய பெண் இன்னும் காணப்படவில்லை,” என்று அமைச்சகம் தெரிவித்தது.தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை ஏழாவது நாளாக தொடர்கிறது.
தொடர்பு துண்டிக்கப்பட்ட சில உள்நாட்டு பகுதிகளுக்கான தரைப்பாதை அணுகலை இந்தோனேசியா அதிகாரிகள் மீண்டும் திறந்துவிட்டதாக விஸ்மா புத்த்ரா எனப் பரவலாக அறியப்படும் வெளிநாட்டு அமைச்சகம். தெரிவித்துள்ளது. இதன் மூலம் உணவு, மருந்து மற்றும் அடிப்படை பொருட்கள் வசதியான முறையில் அனுப்ப முடியும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்றவும், அவசர நிலை அணுகலை எளிதாக்க அருகிலுள்ள மலேசிய பிரதிநிதித்துவ அலுவலகத்தில் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மேடானிலுள்ள மலேசிய துணைத் தூதரகத்தை 24 மணி நேர எண்ணான +62 823-6164-6046-ல் அல்லது mwmedan@kln.gov.my மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.


