அம்பாங் ஜெயா, டிச 4: நாளையும் சனிக்கிழமையும் எதிர்பார்க்கப்படும் கடல் பெருக்கு (air pasang besar) காரணமாக சில பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கக்கூடும். இதனால், சிலாங்கூர் மாநிலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது.
மாநில அரசு அறிவித்த 1,000க்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண மையங்கள் (PPS) தேவையான நேரத்தில் உடனடியாக செயல் படுத்தத் தயாராக உள்ளன என பேரிடர் மேலாண்மை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
“டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் கடல் பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அந்த காலப்பகுதிக்கு தேவையான அனைத்துத் முன் ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம், காரணம் மழை பெய்தால், வெள்ள அபாயம் அதிகரிக்கலாம்.
“எனவே, முன் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன, மேலும், நிலைமையை கண்காணித்து வருகிறோம். கடந்த வாரம் நிலைமை மிகக் கவலைக்கிடமாக இருந்தது. இந்த வாரம் வானிலை மெல்ல மேம்பட்டு வருகிறது. இருப்பினும், நாம் அதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது,” என்று அவர் கூறினார்.
“நாம் இன்னும் எச்சரிக்கையான நிலைமையிலேயே இருக்கிறோம். மேலும், மாநில அரசு அதிகாரிகளின் விடுமுறைகள் டிசம்பர் 15 வரை நிறுத்தப் பட்டுள்ளன,” என்றும் அவர் தெரிவித்தார்.


