கோலாலம்பூர், மே 9 - போலீஸ் அதிகாரிகளைப் போல நடித்து செமினியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்ளையிட்டதாக நம்பப்படும் ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிகாலை 5.00 மணியளவில் நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவத்தின்போது 55 வயதுடைய ஓய்வு பெற்ற ஆடவரும் அவரது மூன்று குடும்ப உறுப்பினர்களும் வீட்டில் இருந்ததாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார்.
சந்தேக நபர்கள் அனைவரும் முகமூடியுடன் காணப்பட்டதோடு அவர்களில் இருவர் போலீஸ் அங்கியை அணிந்திருந்தது கண்காணிப்பு கேமரா (சிசிடிவி)
காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது என்று
அவர் கூறினார்.
சந்தேக நபர்கள் வீட்டின் முன் கதவை உடைத்து நுழைந்து நகைகள், இரண்டு கைப்பேசிகள் மற்றும் 500 வெள்ளி ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் ஏற்பட்ட மொத்த இழப்பு 9,000 என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கும்பலாக கொள்ளையிட்டதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 395 மற்றும் காவல்துறை அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 170 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் இன்ஸ்பெக்டர் கசாலி சுல்கிப்ளியை 016-9140758 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள எந்த காவல் நிலையத்திலும் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, வரிசை வீட்டின் முன்பக்கக் கதவை சந்தேக நபர்கள் பலமுறை உதைத்து உடைத்து உள்ளே நுழைவதைச் சித்தரிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.


