(ஆர்.ராஜா)
கிள்ளான், நவ. 24- சிலாங்கூர் மாநிலத்தில் பக்கத்தான் அரசாங்கம் கடந்த
2008ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை 200 முதல் 300
ஆலயங்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பக்தர்கள் அச்சமும் அவநம்பிக்கையும் இன்றி தங்களின் வழிபாட்டு
நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில் மாநில
அரசு இத்தகைய முயற்சிகளை முன்னெடுத்து செயல்படுத்தி வருவதாக
அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத தலங்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக லீமாஸ் எனப்படும் ஐந்து
சமயங்களை உள்ளடக்கிய சிறப்பு செயல்குழுவை மாநில அரசு
அமைத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
வழிபாட்டுத் தலங்கள் எதிர்நோக்கும் நிலப்பிரச்சினையை தீர்ப்பதோடு
மட்டுமல்லாது அவற்றை நிர்வாகம் செய்வதில் உதவும் நோக்கிலும்
லீமாஸ் வாயிலாக மானியமும் வழங்கி வருகிறோம் என்றார் அவர்.
நேற்றிரவு இங்குள்ள தாமான் செந்தோசாவில் நடைபெற்ற செந்தோசா
சட்டமன்றத் தொகுதி நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வில்
கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமிருடின் இவ்வாறு குறிப்பிட்டார்.
பக்கத்தான் ஆட்சிக்கு வந்த போது அங்கீகரிக்கப்படாத இடங்களில்
நிர்மாணிக்கப்பட்ட காரணத்தால் பல ஆலயங்கள் நிலப் பிரச்சினையை
எதிர்நோக்கி வந்தன. முறையான இடத்தில் இருந்தாலும் பெரும்
தொகையை நிலத்திற்கான பிரீமியமாக செலுத்த வேண்டிய கட்டாயத்தை
எதிர்நோக்கின.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஆலய நிலத்தை ஆர்ஜிதம்
செய்வதற்கான கட்டணத்தை 1,000 வெள்ளியாக நிர்ணயித்தோம். இந்த
நடவடிக்கையின் வழி 2008ஆம் ஆண்டிற்கு பிறகு வழிபாட்டுத் தலங்கள்
பிரீமியம் மற்றும் நில வரியாக பெரும் தொகையை செலுத்த வேண்டிய
சூழல் தவிர்க்கப்பட்டது என்றார் அவர்.
ஆலயங்களுக்கு மட்டுமின்றி, தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு மானியம்
வழங்கப்படுவதோடு தோட்டப்புற மாணவர்களுக்கு பேருந்துக் கட்டணமாக
மாதம் 300 வெள்ளி உதவி நிதி வழங்கும் திட்டத்திற்காக கடந்த ஏழு
அல்லது எட்டு ஆண்டுகளில் 78 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை
செலவிட்டுள்ளோம். இதுதவிர, வசதி குறைந்த உயர்கல்வி
மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், தொழில்முனைவோருக்கு வர்த்தக
உபகரண உதவி என இந்திய சமூகத்திற்கு மாநில அரசு பலவேறு
உதவிகளையும் வழங்கி வருகிறோம் என மந்திரி புசார் தமதுரையில்
குறிப்பிட்டார்.








