(ஆர்.ராஜா)
கிள்ளான், அக். 14 - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செந்தோசா
சட்டமன்றத் தொகுதியிலுள்ள வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 100
சிறார்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
பெருநாள் மகிழ்ச்சியில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த
சிறார்களும் பங்கு கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்
அச்சிறார்களுக்கு தலா 150 வெள்ளி செலவில் புத்தாடைகள் மற்றும்
காலணிகள் வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.
குணராஜ் கூறினார்.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் குறைந்த வருமானம் பெறும் பி40
குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் தனித்து வாழும்
தாய்மார்களிடமிருந்து உதவி கோரி அதிக விண்ணப்பங்கள் கிடைத்து
வருவதைத் தொடர்ந்து சிறார்களுக்கான இந்த தீபாவளி அன்பளிப்பு
வழங்கும் நிகழ்வை தாங்கள் ஏற்பாடு செய்ததாக அவர் சொன்னார்.
மாநில அரசின் ஜோம் ஷோப்பிங் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தீபாவளிப்
பற்றுச்சீட்டுகள் அதிகமான இந்தியர்களைக் கொண்ட இத்தொகுதிக்கு
போதுமானதாக இல்லாத காரணத்தால் கொடை நெஞ்சர்களின் ஆதரவுடன்
இந்த நிகழ்வை கடந்த ஐந்தாண்டுகளாக நாங்கள் நடத்தி வருகிறோம் என
அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு செந்தோசா தொகுதிக்கு 600 பற்றுச்
சீட்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த பற்றுச் சீட்டுகளுக்கு முதல்
நாளிலே 1,200 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. பற்றுச் சீட்டு கிடைத்தவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதன் அடிப்படையில் தொகுதி சேவை மையத்திற்கு வருவோரிடம் இல்லை என்று சொல்லாமல் எங்களால் முடிந்த அளவு தீபாவளிக்கு தேவையான பொருள்களை வழங்கி
வருகிறோம் என்றார் அவர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செந்தோசா தொகுதியில் வசதி
குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் ஏழு நிகழ்வுகளுக்கு தாங்கள்
ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.


