ஷா ஆலம், டிச 5- சிலாங்கூரில் இவ்வாண்டு அக்டோபர் 15ஆம் தேதி வரை 1 கோடியே 46 லட்சம் டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 43 லட்சம் தடுப்பூசிகளை 18 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்கள் பெற்றுள்ளனர்.
இவை தவிர, 519,617 தடுப்பூசிகள் இளையோருக்கும் 320,909 தடுப்பூசிகள் சிறார்களுக்கும் செலுத்தப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மேலும், 40 லட்சம் பெரியவர்களும் 10,202 இளையோரும் 266 சிறார்களும் ஒரு ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில் 155,076 பெரியவர்களுக்கும் 78 இளையோருக்கும் இரண்டு ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று குறித்து சிஜங்காங் உறுப்பினர் டத்தோ டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.
இவ்வாண்டின் 39வது நோய்த் தொற்று வாரம் தொடங்கி 46வது நோய்த் தொற்று வாரம் வரையிலான காலக்கட்டத்தில் தினமும் சராசரி 1,000 முதல் 2,000 கோவிட் சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 95 விழுக்காட்டினர் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் 4.5 விழுக்காட்டினர் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் எதிர்நோக்கியுள்ளனர் என்றார் அவர்.
நோய்த் தாக்கம் குறைந்து காணப்படுவதற்கு சிலாங்கூர் மக்களில் 90 விழுக்காட்டினருக்கும் மேல் ஊக்கத் தடுப்பூசி உள்பட கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுள்ளது காரணமாக விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.








