ஷா ஆலம், நவ 21- இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி இம்மாத தொடக்கம் வரை மேற்கொள்ளப்பட்ட ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி ஒரு கோடி வெள்ளிக்கும் மேல் வர்த்தகம் பதிவு செய்யப்பட்டது.
லட்சக்கணக்கான மாநில மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதில் இத்திட்டம் உதவியுள்ளது என்பதற்கான அளவீடாக இந்த அபரிமித வருமானம் விளங்குகிறது என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.
இந்த விற்பனைத் திட்டத்தின் வழி சுமார் 250,000 பேர் பலன் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் வாரத்திற்கு 13 லட்சம் வெள்ளி வரை வருமானம் ஈட்டப்பட்டது என்று சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.
மாநில அரசின் இந்த அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்டது.
இந்த விற்பனைத் திட்டத்தின் கீழ் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் இறைச்சி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் விற்கப்பட்டன.
இவை தவிர, கெம்போங் மற்றும் செலாயாங் மீன்கள் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கு 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் வாங்குவதற்குரிய வாய்ப்பு பொது மக்களுக்கு கிடைத்தது.








