ஷா ஆலம், நவ 15- மழைக்கான சாத்தியம் இருந்த போதிலும் வரும் 19ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் தவறாது வாக்களிக்கும்படி மாநில மக்களை டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுத் தேர்தலை விரைவாக நடத்துவதில் பிடிவாதமாக இருந்த தேசிய முன்னணியை தண்டிப்பதற்காக மக்கள் அனைவரும் திரண்டு வந்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசாருமான அவர் கூறினார்.
நமக்கு பொறுப்பு உள்ளது. நமக்கு வேறு வழியும் கிடையாது. மக்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்பதோடு அந்த தவறுக்கு தண்டனையும் வழங்க வேண்டும்.
அவர்கள் எளிதில் வென்றுவிட ஒருபோதும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
தேர்தல் தினத்தன்று மாலையில் சிலாங்கூரிலுள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அமிருடின் இவ்வாறு கருத்துரைத்தார்.
பக்கத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல், பெரிக்கத்தான் நேஷனல் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை மதிப்பீடு செய்து தெளிவான முடிவை எடுக்கக்கூடிய உத்வேகம் கொண்டவர்களாக வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பொருத்தமற்ற தருணத்தில் தேர்தலை நடத்தி தங்களுக்கு சிரமத்தைக் கொடுத்தவர்கள் யார் என்பதை வாக்காளர்கள் உணர்ந்திருக்க வேண்டும் என்றும் அமிருடின் சொன்னார்.


