ஷா ஆலம், நவ 6- தடுப்பணை உடைந்த காரணத்தால் இன்று அதிகாலை பெக்கான் தஞ்சோங் காராங்கில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
நான்கு வயது முதல் எழுபது வயது வரையிலான அவர்கள் அனைவரும் தங்கள் உறவினர் வீடுகளில் அடைக்கம் புகுந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.
இந்த வெள்ளச் சம்பவம் தொடர்பில் அதிகாலை 4.07 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தஞ்சோங் காராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அடங்கிய எண்மர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
பெக்கான் தஞ்சோங் காராங் பகுதியில் சுமார் ஒரு மீட்டர் அளவுக்கு ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த தடுப்பணையைச் சரி செய்வதற்கு சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையின் ஒத்துழைப்பை தாங்கள் நாடியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








