கோம்பாக், நவ 6- மத்திய அரசாங்கம் நிலையற்றதாக ஆனதற்கு கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி தனது கொள்கையிலிருந்து தடம் மாறியதே காரணம் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குற்றஞ்சாட்டினார்.
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் கொள்கைகள் நாட்டிற்கு வளப்பத்தைக் கொண்டு வரும் என நம்பியதால் அஸ்மினின் வழித்தடத்தை தாம் பின்பற்றவில்லை என்று கோம்பாக் தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளருமான அவர் சொன்னார்.
ஹராப்பான் கொள்கைகள் நாட்டிற்கு வளப்பத்தையும் சுபிட்சத்தையும் தருவதை நோக்கமாக கொண்டிருந்த காரணத்தால் இந்த கூட்டணிக்கு தெடர்ந்து விசுவாசமாக இருக்க முடிவெடுத்தேன். அஸ்மின் அலியோ தான் கொண்ட கொள்கைக்கு மாறாக தடம் மாறினார். இதன் காரணமாக நிலையற்ற அரசாங்கம் உருவானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கோம்பாக் தொகுதியில் அனுபவமிக்க வேட்பாளரை எதிர்கொண்ட போதிலும் விசுவசமான தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களின் ஆதரவுடன் இத்தொகுதியை ஹராப்பான் மீண்டும் கைப்பற்ற முடியும் எனத் தாம் நம்புவதாக அமிருடின் குறிப்பிட்டார்.
ஈராண்டுகளுக்கு முன்னர் அஸ்மின் ஹராப்பான் கூட்டணியிலிருந்து விலகியது முதல் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தாம் தொடர்ந்து தீர்வு கண்டு வந்துள்ளதாக சிலாங்கூர் மாநில ஹராப்பான் தலைவருமான அவர் கூறினார்.








