சிகிஞ்சான், ஏப் 17- சிலாங்கூர் அரசின் பரிவுமிக்க வணிக விற்பனைத் திட்டம் அதிக சட்டமன்றத் தொகுதிகளில் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று சிகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அதிகமானோர் குறிப்பாக புறநகர்ப்பகுதிகளில் உள்ளவர்கள் இந்த மலிவு விற்பனை வழி பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு இதன் மூலம் கிட்டும் என்று அவர் சொன்னார்.
இத்திட்டத்தை அதிக இடங்களில் அடிக்கடி நடத்தும் பட்சத்தில் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தை சிகிஞ்சான் நகரில் மட்டுமின்றி இதர இடங்களிலும் நடத்தலாம். இத்திட்டத்திற்கான பொருத்தமான இடங்களை அடையாளம் காட்ட நான் தயாராக இருக்கிறேன் என்றார் அவர்.
சிகிஞ்சான் தொகுதி சேவை மைய வளாகத்தில் நேற்று நடைபெற்ற மாநில அரசின் பரிவுமிக்க வணிக திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்களுக்கு சிறந்த பலனைத் தரக்கூடிய இத்திட்டத்தை அமல் செய்த சிலாங்கூர் மாநில அரசு மற்றும் பி.கே.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்திற்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது பொருள் விலை அபரிமித உயர்வு கண்டுள்ளதை நாம் அறிவோம். இது மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளதோடு அவர்கள் அதிகம் செலவிட வேண்டிய சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே. இது போன்ற மலிவு விலைத் திட்டங்கள் அவர்களின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என்றார் அவர்.








