கோலா சிலாங்கூர், மார்ச் 3 - சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு வகையான உதவிகளை வழங்குவதற்காக யாயாசன் ஃபூட் பேங்க் அறவாரியம் 250,000 செலவு செய்துள்ளது.
உணவுக் கூடைகள், மின்சார உபகரணங்கள், சமையலறை பொருள்கள் மற்றும் அன்றாட தேவைக்கான பொருள்கள் இந்நிதியைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக அந்த அறவாரியத்தின் தலைமை செயல் முறை அதிகாரி ஜோஹான் ஹலிட் கூறினார்.
வெள்ளத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஷா ஆலமில் உள்ள தாமான் ஸ்ரீ மூடா, கம்போங் புக்கிட் லாஞ்சோங், பூச்சோங்கில் உள்ள கம்போங் தெங்கா மற்றும் உலு லங்காட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்த உதவிப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இன்று கம்போங் புக்கிட் ஹிஜாவ் மற்றும் கம்போங் பாரிட் மஹாங்கில் வசிக்கும் 100 பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 50,000 வெள்ளி மதிப்பிலான பொருள்களை வழங்கினோம்.
பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் வகையிலான இந்த உதவி எதிர்காலத்திலும் தொடரும் என்று ஜோஹன் குறிப்பிட்டார்.
கம்போங் புக்கிட் ஹிஜாவில் உள்ள மஸ்ஜிட் அல் ஃபலாவில் நடைபெற்ற வெள்ள உதவிப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 17 முதல் டிசம்பர் 19 வரை பெய்த அடை மழையில் மாநிலம் முழுவதும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.








