ஷா ஆலம், ஜூன் 7- நடமாட்டக் கட்ப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறி பொது பூங்காவில் மெதுவோட்ட உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேருக்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் அபராதம் விதித்தது.
ஷா ஆலம், செக்சன் 7, தாமான் தாசேக்கில் ஐவரும் செக்சன் 14, தாமான் தாசேக்கில் நால்வரும் இக்குற்றத்தை புரிந்ததாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பகாருடின் மாட் தாயிப் கூறினார்.
தங்கள் வீடுகளிலிருந்து பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களில் தனியாக உடற்பயிற்சி மேற்கொள்ள மட்டுமே பொது மக்களுக்கு குறிப்பாக ஷா ஆலம் வட்டார வாசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அவர் சொன்னார்.
ஜூன் முதல் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட அந்த எல்லையைக் கடக்க தேசிய பாதுகாப்பு மன்ற எஸ்.ஒ.பி. விதிகளின் படி அனுமதிக்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் பொது இடங்களில் நடமாடியதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது 1976ஆம் ஆண்டு ஊராட்சி மன்றச் சட்டத்தின் 109வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்ட முடியும் என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.








